மண்ணின் குரல்: செப்டம்பர் 2017:மறுகால்தலை தமிழி கல்வெட்டும் சமணர் கற்படுக்கைகளும்

1 மறுமொழிகள்

வணக்கம்.


​திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைக்கு வடகிழக்கே 9 கி.மீ தொலைவில் சீவலப்பேரி என்ற ஊரில் மறுகால்தலை என்ற சிறு குன்று உள்ளது. தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு ஆகிய மூன்று நதிகள் இவ்வூரின் அருகில் இணைகின்றன. இவ்வூரில்  உள்ள சிறு குன்றுகளில் ஒன்றில் மேற்குப் பகுதியில் பஞ்சபாண்டவர் படுக்கை என்றழைக்கப்படும் இயற்கையாய் அமைந்த குகைத்தளம் ஒன்றுள்ளது.    இதில் சமண முனிவர்களுக்கென்று அமைக்கப்பட்ட கற்படுக்கைகள்  காணப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டை முதன் முதலாக 1906ம் ஆண்டில் அப்போதைய நெல்லை மாவட்டக் கலெக்டர் ஹெமைடு என்பவர் கண்டறிந்தார்.

குகைத்தளத்துப் பாறையின் நெற்றிப் பகுதியில் பெரிய எழுத்துக்களில் ஒருவரியில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சில எழுத்துக்கள் ஏறக்குறைய40 செ.மீ உயரம் உள்ளவை. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1ம் நூற்றாண்டாகும்.

"வெண்காஸிபன் கொடுபித கல்கஞ்சனம்"

வெண்காசிபன் என்பவன் இங்குள்ள குகைத்தளத்தில் ஒரு கட்டட அமைப்பு அமைத்துக் கொடுத்துள்ளான் என்பது இதன் பொருளாகும்.


சமஸ்கிருதத்தில் "கஞ்சணம்" என்பது ஒருவகை கோயில் அமைப்பைக் குறிக்கும். பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத் தகட்டையும் குறிக்கும். இக்கல்வெட்டில் படுக்கை அல்லது ஏதோ ஒரு கட்டடப் பகுதியைக் குறிக்கிறது எனக் கொள்ளலாம். காசிபன் என்ற சொல்லில் உள்ள "சி" என்ற எழுத்து அசோகன் பிராமி எழுத்தாகும்.

இத்தொடரில் உள்ள எழுத்துக்கள் ஒரே சீராக இல்லாமல் பெரிதாகவும் ஒழுங்கற்ற முறையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. தரைப்பகுதிக்கும்கல்வெட்டுப் பகுதிக்குமிடையில் சுமார் 40 அடி இடைவெளி அமைந்துள்ளது. 

இந்த சிறு குன்றின் அருகிலேயே உள்ள மலைப்பகுதியில் பாகுபலியின் சிற்பம் ஒன்றும் உள்ளது. பாகுபலியின் சிற்பம் இன்று சாஸ்தாவாக மாற்றம் கண்டு சாஸ்தா தெய்வ வழிபாடு இன்று நடைபெறுகின்றது. இப்பகுதி மக்கள் குலதெய்வ வழிபாடு செய்யும் இடமாகவும் இப்பகுதி அமைந்திருக்கின்றது.

இந்தப் பதிவில் கொற்கையிலும் தற்சமயம் புதுக்கோட்டையிலும்தொல்லியல் ஆய்வாளராகப் பணியாற்றும் திரு.சந்திரவானன் அவர்கள் இக்கல்வெட்டு பற்றி விரிவாக நமக்கு விளக்கமளிக்கின்றார். 

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2017/09/blog-post_16.html
யூடியூபில் காண:     https://youtu.be/-gSioyRr-gA

இப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் முனைவர்.கட்டலை கைலாசம்,  சகோதரர் விஜய் (தீக்கதிர்) ஆகியோருக்கு எனது நன்றி.
















அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

1 comments to "மண்ணின் குரல்: செப்டம்பர் 2017:மறுகால்தலை தமிழி கல்வெட்டும் சமணர் கற்படுக்கைகளும்"

Aadhavan Sethuraman said...
September 16, 2017 at 8:27 AM

தங்கள் முயற்சிகளும்.,அர்ப்பணிப்பும் வணங்கத்தக்கவை சகோதரி., நாளைய தமிழுலகம் நிச்சயம் பயனுய்த்து வாழ்த்தும்.

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES